

சென்னிமலை,
சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் முருங்கத்தொழுவு ஊராட்சி கிராம சபை கூட்டம் வடுகபாளையத்தில் நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசக்தி தலைமை தாங்கினார்.
அப்போது கூட்டத்துக்கு வந்த பொதுமக்கள் கடந்த 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. குடிநீர், சாலை, கிராம சுகாதாரம் போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் கால்நடை மற்றும் சுகாதார துறைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. எனவே இந்த கூட்டத்தை ரத்து செய்து விட்டு மாவட்ட கலெக்டரிடம் அனுமதி வாங்கி சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது கூடுதல் வட்டார வளர்ச்சி அதிகாரி சிவசக்தி, தீர்மானம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
ஆனால் கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களில் சிலர் சென்னிமலை அறச்சலூர் ரோட்டில் உள்ள அம்மன்கோவில் புதூருக்கு சென்று அங்கு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.