ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
ஐஐடி மாணவி தற்கொலை சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி
Published on

சென்னை

சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் கடந்த நவம்பர் 9-ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். பெற்றோர் கேரளாவில் இருப்பதால் விடுதியில் தங்கி இருக்கும் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக கூறி, விடுதி காப்பாளர் லலிதா தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடி-யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாலும், தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ போன்ற தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட கோரி காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் என்.அஸ்வத்தாமன் பொது நல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாரயணன், சேஷாயி அமர்வு, ஐ ஐ டி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ-யில் பணியாற்றிய இரு அதிகாரிகள் அடங்கிய குழு, பாத்திமா மரணம் குறித்து விசாரிப்பதாக அரசுத் தரப்பில் அளித்த விளக்கத்தை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மேலும் மனுவில் போதிய ஆவண ஆதாரங்கள் இல்லை என உத்தரவில் தெரிவித்துள்ள நீதிபதிகள், மாணவ-மாணவிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்க ஐஐடி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com