15 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு: இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது - கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டை

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது. கடைசி நாளில் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டனர்.
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் 5-ந் தேதி (அதாவது நாளை) இடைத்தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தற்போது, தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

தொகுதிவாரியாக பார்த்தால், அதானி தொகுதியில் 8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜய நகரில் 13 பேர், சிக்பள்ளாப் பூரில் 9 பேர், கே.ஆர்.புரத் தில் 13 பேர், யஷ்வந்தபுரத் தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் என மொத்தம் 165 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாககே.ஆர்.பேட்டையில் 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 வி.வி.பேட் எந்திரங்கள் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்) பயன்படுத்தப்படுகின்றன. இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் ஆவர்.

இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 414 ஆகும். வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட்டு உள்பட 11 ஆவணங் களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். இந்த 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 958 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த 15 தொகுதிகளில், பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், சிவாஜிநகரில் எம்.சரவணா, ராணிபென்னூரில் அருண்குமார் புஜார் ஆகியோரும் களம் இறக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் புதிய முகங்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக காக்வாட் தொகுதியில் பா.ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த ராஜூ காகே போட்டியிடுகிறார். கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லகன் ஜார்கிகோளியும், சிவாஜிநகரில் ரிஸ்வான் ஹர்ஷத்தும் போட்டியிடுகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி, யஷ்வந்தபுரத்தில் ஜவராயிகவுடா, கோகாக்கில் அசோக் பூஜாரி உள்ளிட்டோரை களம் இறக்கியுள்ளது. ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் சுமார் ரூ.1,200 கோடி சொத்து மதிப்புடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் கூட்டணி அரசில் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தவர். அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக போட்டியிட்டு, பா.ஜனதா, காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com