

புதுடெல்லி,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், கொவைட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 36,145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,85,576ஆக உயர்ந்துள்ளது.
குணமடைவோர் வீதமும், 64 சதவீதம் என்ற புதிய உச்சத்தை நோக்கி வேகமாக நெருங்கி வருகிறது. இன்று இது 63.92 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் தற்போது அதிக அளவிலான கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,62,91,331-ஆக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் தனியார் துறை முயற்சிகளின் மூலம், மருத்துவமனைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, அதிகளவில் பரிசோதனை செய்யப்படுவதன் வாயிலாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் அடையாளம் கண்டு, உரிய சோதனைகளை மேற்கொள்வதன் மூலம், உயிரிழப்புகளைக் குறைக்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, உயிரிழப்பு வீதமும் பெருமளவிற்குக் குறைந்து, தற்போது 2.31 சதவீதமாக உள்ளது. உலகிலேயே, மிகக் குறைந்த உயிரிழப்பு ஏற்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.