ஆம்பூரில் திருமண மண்டபத்திற்கு வைத்த ‘சீல்’ தற்காலிகமாக அகற்றம்

ஆம்பூரில் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அனுமதியின்றி நடந்ததையொட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட திருமண மண்டபத்தில் தற்காலிகமாக ‘சீல்’ அகற்றப்பட்டது.
ஆம்பூரில் திருமண மண்டபத்திற்கு வைத்த ‘சீல்’ தற்காலிகமாக அகற்றம்
Published on

ஆம்பூர்,

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பள்ளி வாசல்களின் முத்தவல்லிகள் பங்கேற்ற கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இக்கூட்டத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் நடந்து முடிந்த பிறகு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வேட்பாளர் கதிர்ஆனந்த் ஆகியோர் அங்கிருந்து சென்று விட்டனர்.

அதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர், துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், தாசில்தார் சுஜாதா ஆகியோர் அந்த மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கூட்டம் நடத்துவதற்கு அனுமதி பெறாத காரணத்தாலும், அந்த கூட்டம் நடைபெறுவது குறித்து மண்டபத்தின் நிர்வாகி தேர்தல் ஆணையத்துக்கு தகவல் தெரிவிக்காத காரணத்தாலும் திருமண மண்டபத்தை பூட்டி வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.

இந்த நிலையில் அந்த திருமண மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்துவதற்கு ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் திருமண நிகழ்ச்சி தடைபடாமல் இருக்க அனுமதி அளிக்க வேண்டும் என திருமண மண்டப நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டிருந்த சீல் தற்காலிகமாக அகற்ற கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் தற்காலிகமாக சீலை அகற்றினர். திருமண நிகழ்ச்சி முடிந்தவுடன் மண்டபத்திற்கு மீண்டும் சீல் வைக்கப்படும் என வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com