ஆதிச்சநல்லூரில் 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஆதிச்சநல்லூரில் 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆதிச்சநல்லூரில் 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு
Published on

ஸ்ரீவைகுண்டம்,

தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய இடங்களில் தமிழக அரசு சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குனர் பாஸ்கர், ஆய்வாளர் லோகநாதன் தலைமையிலான ஊழியர்கள் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிவகளை பரும்பு பகுதியில் 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் 3 இடங்களிலும், கால்வாய் ரோடு அருகில் மற்றொரு இடத்திலும் பள்ளம் தோண்டி அகழாய்வு மேற்கொள்கின்றனர். அகழாய்வின்போது கிடைத்த மண்பாண்ட ஓடுகள், உலைகளின் சிதறல்கள் போன்றவற்றை சேகரித்து, புளியங்குளத்தில் உள்ள முதுமக்கள் தாழிகள் தகவல் மைய வளாகத்தில் சேகரித்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட அகழாய்வில் நேற்று 5 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை முழுமையாக வெளியே எடுக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். முதுமக்கள் தாழிகளின் மேல்பகுதி சிதைந்தும், அடிப்பகுதி முழுமையாகவும் உள்ளது. முதுமக்கள் தாழிகளின் அருகில் எலும்புகளும் கிடைத்தன.

ஆதிச்சநல்லூரில் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நடந்த அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்பாலான ஆயுதங்கள், வெண்கலத்தாலான பொருட் கள், தங்க நகை ஆபரணங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com