பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரமேஷ்குமார், பா.ஜனதா உறுப்பினர் பூர்ணிமா உள்பட பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதிலளிக்கையில் கூறியதாவது:-
நிலங்களை சர்வே செய்வது பெரிய சவாலாக உள்ளது. அடிப்படை ஆவணங்களை வழங்க வேண்டும். இத்தகைய விஷயங்களை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண வேண்டியுள்ளது. சில தாசில்தார்கள் ஓய்வு பெற்ற பிறகும், கையெழுத்து போட்டு நிலம் ஒதுக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. இத்தகைய சிக்கல்களால் நிலம் சர்வே செய்யும் பணி தாமதமாகியுள்ளது.
315 கிராமங்கள்
நில ஆவணங்களின் போடி பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த 2015-ம் ஆண்டே பணிகள் தொடங்கப்பட்டன. 174 தொகுதிகளில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகாவில் 315 கிராமங்கள் உள்ளன. நில அளவீடு செய்பவர்கள் 27 பேர் மூலம் அங்கு நிலங்களை சர்வே செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்கு இதுவரை 82 கிராமங்களில் நில அளவீட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கர்நாடகத்தில் தாலுகா அலுவலகங்களுக்கு மினி விதான சவுதா கட்டிடம் கட்டி கொடுக்கப்படுகிறது. அதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அதற்கான கட்டிட வரைபடத்தை வருவாய்த்துறையே தயாரித்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பதிவாளர்
நிலம் பதிவு செய்யும் சார்பதிவாளர் அலுவலகங்களில் தவறுகள் நடக்கின்றன. போலி ஆவணங்களின் அடிப்படையில் நிலத்தை பதிவு செய்கிறார்கள். இத்தகைய சம்பவங்களில் சார்பதிவாளர் மற்றும் தாசில்தாரை பணி இடைநீக்கம் செய்தால், கோர்ட்டுக்கு சென்று தடை உத்தரவு பெற்று வந்து 3 நாட்களில் மீண்டும் பணிக்கு வந்துவிடுகிறார்கள்.
சரி போகட்டும் என்று அவர்களை பணி இடமாற்றம் செய்தால், அடுத்த சில நாட்களில் அதே இடத்திற்கு வந்துவிடுகிறார்கள். அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மதிப்பே இல்லாத நிலை உள்ளது. என்ன செய்வது என்று தெரியவில்லை.
வலுவான தடுப்பு சுவர்
பெங்களூருவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலம் மீட்கப்படுகிறது. அவ்வாறு ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்படும் நிலங்கள், அடுத்த 3 மாதங்களில் மீண்டும் கைவிட்டு போய்விடுகிறது. அதனால் மீட்கப்படும் நிலங்களுக்கு வலுவான தடுப்பு சுவர் கட்டப்படும். இதற்கு ரூ.100 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்குமாறு முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம்.
இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.
அதன் பிறகு பேசிய ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர் ஏ.டி.ராமசாமி, பெங்களூருவை நில கொள்ளையர்களிடம் கொடுத்துவிட்டோம். அதே போல் கர்நாடகத்தை நில கொள்ளையர்களிடம் கொடுத்துவிட வேண்டாம் என்றார்.