செங்குறிச்சியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

செங்குறிச்சியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Published on

கோபால்பட்டி,

சாணார்பட்டி ஒன்றியம் செங்குறிச்சி கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அப்பகுதியில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு மேல்நிலைத்தொட்டியில் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதுதவிர காவிரி கூட்டுக்குடிநீரும் வினியோகம் செய்யப்பட்டது.

ஆனால் வறட்சி காரணமாக ஒரு ஆழ்துளை கிணறு வறண்டது. இதனால் ஒரு ஆழ்துளை கிணற்றில் உள்ள தண்ணீரே பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக காவிரி கூட்டுக்குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். இதையடுத்து தங்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கிராம மக்கள் காலிக்குடங்களுடன் செங்குறிச்சி-திண்டுக்கல் சாலையில் எஸ்.குரும்பபட்டி பஸ் நிறுத்தம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் சிவலிங்கம் மற்றும் வடமதுரை போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். செங்குறிச்சிக்கு வரும் காவிரி கூட்டுக்குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதற்கிடையே போக்குவரத்துக்கு இடையூறாக மறியல் செய்ததாக கூறி கிராம நிர்வாக அலுவலர் கோபாலகிருஷ்ணன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 75 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com