வண்டலூர்,
தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. சார்பில் கருப்பு கொடி ஏந்தி அ.தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று செங்கல்பட்டு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் மறைமலைநகரில் அமைந்துள்ள தனது வீட்டு வாசல் முன்பு கருப்பு சேலை அணிந்து கையில் கருப்பு கொடி ஏந்தி முககவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரத்தில் தி.மு.க.வினர் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட துணை செயலாளர் விசுவநாதன் தலைமையில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதா கோவில் தெரு, ஒத்தவாடை தெரு, மீனவர் பகுதி, வடக்கு மாமல்லபுரம், கிழக்கு ராஜ வீதி உள்ளிட்ட பேரூராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் முக கவசம், கருப்பு சட்டை அணிந்து சமூக இடைவெளியுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
செங்கல்பட்டில் செங்கல்பட்டு நகர தி.மு.க. செயலாளர் நரேந்திரன், செங்கல்பட்டு நகர்மன்ற முன்னாள் தலைவர் அன்புசெல்வன் ஆகியோர் தங்களது வீட்டு முன்பு கருப்பு கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இதுபோல சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி தி.மு.க. செயலாளர் கே.பி.ராஜன், ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜேந்திரன், தெய்வானை தருமன், மோகனா ஜீவானந்தம், அருள்தேவி, பவுல், சண்முகம் ஆகியோர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், பேரூராட்சி செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் சாலவாக்கம் குமார், சேகர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து கைகளில் கருப்புகொடி ஏந்தி மின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.