

சென்னை,
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் வருகிற 10-ந்தேதி இசை நிகழ்ச்சி நடத்துகிறேன். இதில் பல பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகிறார்கள். அதிகமாக தமிழ் பாடல்கள் பாடப்படும். சில இந்தி பாடல்களையும் பாடுவார்கள்.
சென்னை எனது வீடு மாதிரி. இங்கு இசை நிகழ்ச்சியை நடத்துவது மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. வெளிநாட்டு இசை கலைஞர்கள் சிலரும் இதில் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் வெளிநாட்டினருடன் நமது இசை பரிமாற்றத்துக்கு வாய்ப்பு ஏற்படும். எனது மகன் இந்த நிகழ்ச்சியில் பாடவில்லை. அவனுக்கு இசை பற்றிய அறிவுரைகளையும் நான் சொல்வது இல்லை.
பெங்களூருவில் இசை கலைஞர்களுக்கு என்று பிரத்யேகமாக இசை அருங்காட்சியகம் உள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர்கள் டி.எம்.சவுந்தரராஜன், பாடலாசிரியர் வாலி உள்ளிட்ட பல இசை உலக கலைஞர்கள் நினைவை போற்றும் வகையில் நினைவு சின்னம் உருவாக்க வேண்டியது அவசியம்.
பெங்களூருவை போல் சென்னையிலும் இசை அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அதற்கு அரசு உதவி செய்ய வேண்டும். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.