கடலூரில் சுட்டெரித்த வெயில், அனல் காற்றுவீசியதால் பொதுமக்கள் அவதி

கடலூரில் வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
Published on

கடலூர்,

கோடைக்காலம் என்றால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான். நாடு முழுவதும் கோடை கால வெயிலானது இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக பதிவாகும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்தது.

அதற்கு ஏற்றார்போல் கடலூரில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் உக்கிரம் அதிகமாக இருந்தது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கத்தொடங்கியது. அக்கினி நட்சத்திரம் தொடங்கியது முதல் இதுவரை உள்ள காலத்தில் கடலூரில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை வெயில் பதிவானது.

வழக்கம்போல் நேற்று காலையில் சூரியன் உதயமாகி ஒளி உடலில் பட்டதும் சுள்ளென சுடுவதை உணர முடிந்தது. பின்னர் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்தது. வெயிலின் கொடுமையை தாக்கு பிடிக்க முடியாமல் பாதசாரிகள் கையில் குடைபிடித்து கொண்டும், தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் சென்றதை பார்க்க முடிந்தது. இருசக்கர வாகனங்களில் செல்லும் பெண்கள், தங்களது முகத்தை துணியால் மூடிக்கொண்டு சென்றதை காணமுடிந்தது.

கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் சாலையோர சிறு வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் ராட்சத குடையை நாட்டி வைத்தும், சிலர் தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் வியாபாரம் செய்தனர்.

மதியவேளையில் அனல் காற்று வீசியதால் வாகனங்களில் சென்ற பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் புழுக்கம் ஏற்பட்டு உடலில் வியர்வை நீர் வடிந்து உடுத்தி இருந்த ஆடைகளை நனைய செய்ததோடு தாகத்தை வருத்தியது. இதனால் நீர்-மோர், பழச்சாறு, சாத்துக்குடி ஜூஸ், கரும்பு சாறு, பதனீர், இளநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றை பருகியும், வெள்ளரிப்பிஞ்சு, தர்பூசணி, நுங்கு மற்றும் பழங்களை வாங்கி சாப்பிட்டும் தாகத்தை தணித்துக்கொண்டனர்.

அக்கினி நட்சத்திரம் முடிவடைய இன்னும் 13 நாட்கள் உள்ளன. அதுவரை வெயிலின் தாக்கத்தை சமாளிக் வேண்டும் என்பதால் வசதி படைத்த சிலர் ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடைவாழ் இடங்களுக்கு சுற்றுலா சென்று விட்டனர். பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் கோடை வெயிலின் உக்கிரம் தணிய வேண்டும் என்றால் வருண பகவான்தான் கருணை காட்ட வேண்டும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com