கடலூரில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்க முயன்ற ஓட்டல் தொழிலாளி ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். உறவினர் இறந்த துக்கம் விசாரிக்க சென்றபோது தாயின் கண்எதிரே இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Published on

கடலூர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நெல்லுக்கடை தெருவை சேர்ந்தவர் லோகநாதன் மகன் சரவணன்(வயது 42). சற்று மூளைவளர்ச்சி குன்றிய இவர் அங்குள்ள ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டு பகுதியில் இறந்த தனது உறவினரின் துக்கம் விசாரிப்பதற்காக சரவணன் நேற்று காலை தனது தாயார் விஜயாவுடன்(67) சிதம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் விழுப்புரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணம் செய்வதற்காக டிக்கெட் எடுத்துவிட்டு முன்பதிவு பெட்டியில் கீழே அமர்ந்து இருவரும் பயணம் செய்ததாக தெரிகிறது.

அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் விஜயாவிடம் இருந்த டிக்கெட்டை பரிசோதனை செய்தபோது இது முன்பதிவு பெட்டி, நீங்கள் முன்பதிவு அல்லாத பெட்டியில் தான் பயணம் செய்ய வேண்டும். அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயில் நிற்கும்போது இறங்கி, முன்பதிவு அல்லாத பெட்டியில் ஏறிக்கொள்ளுங்கள் என்றார். உடனே விஜயா என்னால் எழுந்து நடக்க இயலாது, எனது மகன் மூளை வளர்ச்சி குன்றியவன். நாங்கள் இருக்கையில் அமரவில்லை. கீழேதான் அமர்ந்து இருக்கிறோம். மனிதாபமான அடிப்படையில் உதவி செய்யுங்கள் என்றார்.

ஆனால் டிக்கெட் பரிசோதகருக்கு இந்தி மட்டும் தெரிந்ததால், விஜயாவின் பேச்சு அவருக்கு புரியவில்லை. மேலும் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய அனுமதிக்க முடியாது. கண்டிப்பாக அடுத்த ரெயில் நிலையம் வந்ததும் இருவரும் இறங்கி முன்பதிவு அல்லாத பெட்டியில்தான் ஏறிக்கொள்ள வேண்டும் என்று அவருடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்தார்.

இந்த நிலையில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.30 மணியளவில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் வந்து நின்றது. அப்போது விஜயாவும், அவரது மகன் சரவணனும் ரெயில் பெட்டியில் இருந்து மெதுவாக இறங்கினர். பின்னர் முன்பதிவு அல்லாத பெட்டியில் ஏறுவதற்காக ஒவ்வொரு பெட்டியாக பார்த்தபடி நடந்து சென்று கொண்டிருந்தனர். பின்னர் முன்பதிவு அல்லாத பெட்டியில் சரவணன் ஏறினார். ஆனால் வயதான அவரது தாயார் ஏறுவதற்குள் ரெயில் புறப்பட்டுவிட்டது. அப்போது தனது தாய் ரெயிலில் ஏறவில்லை என்பதை அறிந்த சரவணன் திடீரென ஓடும் ரெயிலில் இருந்து கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தவறி ரெயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளி வழியாக கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சரவணனின் 2 கால்களும் துண்டானது.

இதைப் பார்த்து அவரது தாய் விஜயா கதறி அழுதார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். துக்கம் விசாரிக்க சென்றபோது தாயின் கண் எதிரே ஓடும் ரெயிலில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com