சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் அதிக போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையான திண்டுக்கல்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் கிருங்காக்கோட்டை விலக்கு அருகே நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் எதிரே சாலையின் ஓரத்தில், கடந்த 20 ஆண்டு காலமாக இப்பகுதி மக்களால் வளர்க்கப்பட்ட மரம் கடந்த ஒரு வருடமாக பட்டுப்போன நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழுந்து ஆபத்தை விளைவிக்கக் கூடிய வகையில் நிற்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இதன் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்களும், பாதசாரிகளும் சென்று கொண்டிருக்கின்றனர். நீதிமன்றமும், கால்நடை மருத்துவமனையும் உள்ள இப்பகுதியில் ஆபத்தான நிலையில் பட்டுப்போன மரம் இருக்கிறது. இவ்வாறு நிற்கும் மரம் தினம்தோறும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது.
இதனால் அப்பகுதியில் மக்கள் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள பட்டுப்போன மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என இப்பகுதி வணிகர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.