தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட செயல்பாடுகள் குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சந்தானம், சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் இந்தியா, தனித்துணை கலெக்டர் அஜய்சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் (பொறுப்பு) நாகலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்தும், திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் ஏ.ஐ.டி.யு.சி, சி.ஐ.டி.யு, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக விளக்கி பேசினார்கள். திருமணம், இயற்கை மரணம், ஓய்வூதியம், பணியிடத்து விபத்து மரணம் ஆகியவை தொடர்பாக நிவாரண உதவிகள் கேட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது தீர்வு காண விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். நலத்திட்ட உதவிகள் விரைவாக பயனாளிகளை சென்றடைவதை துறை சார்ந்த அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு பெற்று 60 வயது பூர்த்தி அடைந்த 50 தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ஓய்வூதிய உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் மலர்விழி வழங்கினார். இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.