அரசுப்பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு அரிசி, பருப்பு

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது.
Published on

ஈரோடு,

தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் தமிழக அரசின் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவு வழங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த சூழலிலும் மாணவ-மாணவிகளுக்கு உணவு தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அனைத்து அரசுப்பள்ளிக்கூடங்களிலும் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளுக்கு ஒரு மாதத்துக்கு உரிய அரிசி, பருப்பு ஆகியவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் முறையாக அரிசி, பருப்பு வழங்க கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். இதுபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ-மாணவிகளுக்கான அரிசி மற்றும் பருப்பு முறையாக வழங்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிடும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டது. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா 3 கிலோ 100 கிராம் அரிசி, 1 கிலோ 200 கிராம் பருப்பு வழங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தலா 4 கிலோ 650 கிராம் அரிசி, 1 கிலோ 250 கிராம் பருப்பு வழங்கப்பட்டது. ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் சத்துணவு சாப்பிடும் மாணவிகளுக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை சுகந்தி உணவுப்பொருட்களை வழங்கினார்.

ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கூட பெற்றோர்-ஆசிரியர் சங்க துணைத்தலைவர் சாமி ரத்தினம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவுப்பொருட்களை வழங்கினார். பள்ளிக்கூட ஆசிரியை உமா மகேஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் நிர்மலா ஆகியோர் உணவுப்பொருட்களை தனித்தனி பைகளில் வைத்து பெற்றோரிடம் வழங்கினார்கள்.

இதுபோல் ஈரோடு மாநகராட்சியில் உள்ள அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன. பொருட்கள் வாங்க மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர் கூட்டமாக வருவதை தவிர்க்க, குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்களை பெற்றுச்செல்ல ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே பெற்றோர்கள் அந்தந்த நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிச்சென்றனர். சில பள்ளிக்கூடங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com