முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள் உயர்வு: உயர்கல்வி நிறுவனங்களில் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி நாராயணசாமி தகவல்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கான சலுகைகள் உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், உயர்கல்வி நிறுவனங்களில் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
முன்னாள் ராணுவத்தினருக்கு சலுகைகள் உயர்வு: உயர்கல்வி நிறுவனங்களில் கலாசார சந்திப்பு நிகழ்ச்சி நாராயணசாமி தகவல்
Published on

புதுச்சேரி,

முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்லூரி கல்வி முறையின் ஒரு பகுதியாக விளையாட்டு மற்றும் கலாசார நடவடிக்கைகள் கருதப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மாணவர்களை போட்டிகளில் பங்கேற்கவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் ஊக்குவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே மீண்டும் விளையாட்டு மற்றும் கலாசார சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த கலாசார சந்திப்பு நிகழ்ச்சி கடைசியாக 1988-ம் ஆண்டு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த சந்திப்பு நிகழ்ச்சி வருகிற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதுச்சேரி, காரைக்காலில் நடைபெற உள்ளது. இதற்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இதில் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

போட்டிகளை நடத்தும் பொறுப்பு ஒவ்வொரு கல்வி நிறுவனங்களிடமும் வழங்கப்பட்டுள்ளது. போட்டிகளை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் வளாகத்திலோ அல்லது வேறு இடங்களிலோ நடத்தலாம். இதற்கான போக்குவரத்து, தங்குமிடம், உணவு உள்பட அனைத்து செலவினங்களும் பங்கேற்கும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படும்.

போட்டிகளில் வெற்றிபெறும் வீரர்களுக்கு கல்வித்துறை மூலம் சான்றிதழ் வழங்கப்படும். அந்த சான்றிதழ்கள் வேலைவாய்ப்பில் ஒதுக்கீடு பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். கலாசார போட்டிகளை நடத்துவதற்கு அரசு ரூ.75 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 21 விதமான விளையாட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

முன்னாள் ராணுவ வீரர்களின் நலக்குழு கூட்டம் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகளை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தீபாவளி பரிசு கூப்பன் ரூ.3 ஆயிரத்திலிருந்து ரூ.4 ஆயிரமாகவும், அவர்களது வாரிசுகளுக்கான கல்விக்கட்டணம் 2 மடங்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 23 விதமான சலுகைகளை உயர்த்தி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தியாகிகள் இறந்தால் அரசு சார்பில் உரிய மரியாதை அளிக்கப்படுகிறது. அதேபோல் முன்னாள் ராணுவத்தினர் இறந்தால் உரிய மரியாதை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், உயர்கல்வித்துறை இயக்குனர் யாசம் லட்சுமிநாராயண ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர். தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று முதல் 3 இடங்களை பிடித்த முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com