கலபுரகி,
கலபுரகி மாவட்டம் ஷாகாபாத் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ் (வயது 43). இவர் முன்னாள் மந்திரி குருநாத்தின் உறவினர் ஆவார். இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்கு வேலைக்காக சதீஷ் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சித்தாபூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள், காரை கொண்டு சதீசின் மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதினர். இதில் அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்
உடனே காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள் அரிவாள், பட்டாகத்தியால் சதீசை சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஷாகாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையான சதீசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
பின்னர் சதீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்தது யார்?. என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதீசை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.