காஞ்சீபுரத்தில் புதிதாக திறக்க இருந்த காய்கறி சந்தையில் குறைந்த கடைகளுக்கு அனுமதி; வியாபாரிகள் மறியல்

காஞ்சீபுரத்தில் புதிதாக திறக்க இருந்த காய்கறி சந்தையில் குறைந்த கடைகளுக்கு அனுமதியளித்ததால் வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சீபுரத்தில் புதிதாக திறக்க இருந்த காய்கறி சந்தையில் குறைந்த கடைகளுக்கு அனுமதி; வியாபாரிகள் மறியல்
Published on

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் ரெயில்வே ரோட்டில் செயல்பட்டு வந்த ராஜாஜி மார்க்கெட் மூடப்பட்டு, காஞ்சீபுரம் அருகே வையாவூர் சாலையில் தற்காலிகமாக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு கடந்த 3 மாதங்களாக செயல்பட்டு வந்தது.

அங்கு மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளித்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து காய்கறி சந்தை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை நேற்று திறக்கப்படுவதாக இருந்தது.

ஆனால் இந்த சந்தைக்கு நகராட்சி சார்பில் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த வியாபாரிகள் அங்கு கடைகளை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை காஞ்சீபுரம் அருகே வையாவூர் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள், ராஜாஜி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கத்தில் 325 சங்க உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் புதிதாக அமைக்கப்பட உள்ள சந்தையில் 100 கடைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 325 சங்க உறுப்பினர்களை நம்பி 5 ஆயிரம் குடும்பத்தினர் உள்ளனர். எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே அதிக அளவில் கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி மேற்பார்வையில், நகராட்சி சுகாதாரத்துறையினர், பெரிய காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூடுதலாக கடை ஒதுக்கீடு செய்து கொடுப்பதாக உறுதியளித்தனர்.

அதன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக நேற்று திறக்கப்படுவதாக இருந்த காய்கறி சந்தை திறக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com