காஞ்சீபுரத்தில் தற்காலிக காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வந்தது

காஞ்சீபுரத்தில் தற்காலிக காய்கறி சந்தை பயன்பாட்டுக்கு வந்தது.
Published on

காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் செயல்பட்டு வந்த ராஜாஜி காய்கறி சந்தை மூடப்பட்டது. இதையடுத்து காஞ்சீபுரம் வையாவூர் சாலையில் 200 கடைகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு காய்கறி சந்தை கடந்த 3 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. அங்கு மழைநீர் தேங்கியதால் வியாபாரிகளும் பொதுமக்களும் அவதிக்குள்ளானார்கள். கடையை வேறு இடத்துக்கு மாற்ற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார். அதன்படி காஞ்சீபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

100 கடைகளுடன் காய்கறி சந்தை அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் தேவைக்காக புதிதாக ஆழ்துளை கிணறு, கழிவறைகள் அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் முதல் இந்த காய்கறி சந்தை செயல்பட இருந்தது. ஆனால் போதிய கடைகள் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் நகராட்சி நிர்வாகம் வியாபாரிகளின் கோரிக்கையை பரிசீலிப்பதாக கூறியதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.

இதையடுத்து நேற்று முதல் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் 140 கடைகள் அமைக்கப்பட்டு தற்காலிக காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் காய்கறிகளை வாங்கி சென்றனர். முககவசம் அணியாமல் வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com