கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது கொளுத்தும் வெயிலிலும் சாரை, சாரையாக வந்து வாக்களித்தனர்

நாடாளுமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கொளுத்தும் வெயிலிலும் சாரை, சாரையாக வந்து வாக்ளித்தனர்.
கரூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது கொளுத்தும் வெயிலிலும் சாரை, சாரையாக வந்து வாக்களித்தனர்
Published on

கரூர்,

தமிழகத்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்காக 1,031 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1,751 போலீசார் ஈடுபட்டனர். வாக்காளர்கள் வாக் களிப்பதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் நேற்று முன்தினம் காலை முதல் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல வாக்குச்சாவடி மையங்களில் பணியில் ஈடுபடுபவர்களுக்கு குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அங்கு வாக்குச்சாவடி அலுவலர்கள் தயார் நிலையில் இருந்தனர். நேற்று காலை 6 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு அரசியல் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் நடந்தது. அதன்பின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

கரூர் நகரப்பகுதியை பொறுத்தவரை காலை 6.45 மணிக்கே சில வாக்குச்சாவடி மையங்கள் முன்பு வாக்காளர்கள் வரிசையில் வந்து நின்றதை காணமுடிந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் முதல் ஆளாக வாக்களித்து விட்டு வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். இதேபோல நேற்று காலை வெயிலின் தாக்கம் குறைவாக இருந்ததால் வாக்காளர்கள் பலர் காலையிலேயே வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்தனர். இதனால் காலை 7.30 மணி முதல் வாக்காளர்கள் வரிசை நீண்டு கொண்டே சென்றது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக வரிசை அமைக்கப்பட்டிருந்தது. வரிசைப்படி வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை கையில் எடுத்து வந்திருந்தனர். அதேபோல பூத்சிலிப்பையும் உடன் எடுத்து வந்திருந்தனர். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்திருந்தனர்.

வாக்குச்சாவடி மையத்தின் உள்ளே தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களின் பெயர் விவரம், அடையாள அட்டையை சரிபார்த்து இடது கையில் ஆள்காட்டி விரலில் மையிட்டனர். அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தானை அழுத்தி தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். மேலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் வி.வி.பேட் கருவியில் தாங்கள் அளித்த வாக்கினை சரியாக காட்டுகிறதா? என்பதையும் பார்த்து விட்டு வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வந்தனர்.

கரூர் நகரப்பகுதியில் உள்ள கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நகராட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வெங்கமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, புனித தெரசா மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது.

காலை 10 மணிக்கு மேல் வாக்காளர்கள் அதிகமாக வரத்தொடங்கினர். நேரம் செல்ல செல்ல வாக்குச்சாவடி மையங்களில் கூட்டம் நிரம்பியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும் வரிசையை ஒழுங்குபடுத்தினர். பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் துணை ராணுவ படையினர் துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பகல் 12 மணிக்கு பொதுமக்கள் சாரை, சாரையாக வந்து வாக்களித்தனர். இதனால் கரூர் நகரப்பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. வாக்குச்சாவடி மையங்கள் முன்பு பொதுமக்கள் கூட்டமாக காணப்பட்டது. அதேநேரத்தில் அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளி தற்காலிக கூடாரம் அமைத்து கூடியிருந்தனர். மேலும் தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி மைய எண் குறித்து வழிகாட்டி அனுப்பினர்.

வெயிலின் தாக்கத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் வாக்குச்சாவடி மையங்கள் முன்பு சாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் மாற்றுத்திறனாளிகள், உடல் நலம் குன்றியவர்களும் வாக்களிக்க வசதியாக மூன்று சக்கர வண்டிகளும் வாக்குச்சாவடி மையங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொண்டனர். வாக்குச்சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக இருந்தது. கரூரில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமை யாக கொளுத்தும் வெயிலிலில் வந்து வாக்களித்து விட்டு சென்றனர். இதேபோல கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.

இதேபோல கரூர் மாவட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. கிராமப்புறங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். லாலாபேட்டை பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட அழகாபுரி கிராமத்தில் வாக்குச்சாவடி மையத்தில் காலை 11 மணி அளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகி விட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த எந்திரத்தை பழுது நீக்கி சரிசெய்தனர். இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தடையானது. பகல் 12 மணிக்கு பிறகு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வாக்காளர்கள் வரிசையாக நின்று வாக்களித்தனர்.

குளித்தலையில் வாக்காளர்கள் பலர் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்திருந்து வாக்களிப்பதற்காக காத்திருந்தனர். 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் ஆர்வமுடன் வாக்களித்தனர். குப்பாச்சிப்பட்டி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அங்கு புதிய எந்திரம் பொருத்தப்பட்டு, பழுதான எந்திரம் குளித்தலை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டுசெல்லப்பட்டது. இதன்காரணமாக அங்கு சிறிது நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. குளித்தலை நகரப்பகுதியில் அமலராக்கினி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது ஏற்பட்டதை அதிகாரிகள் உடனடியாக சரி செய்தனர். அதன்பின் மீண்டும் வாக்குப் பதிவு தொடங்கியது.

கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சில வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு நடைபெறுவது தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மையங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் வந்து எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்த பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 267 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பள்ளப்பட்டி ஊராட்சி மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதி முஸ்லிம்கள் ஆர்வத்துடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தனர்.

பள்ளப்பட்டியை சேர்ந்த சில முதியவர்கள், பொதுமக்கள் ஏற்பாட்டில் சிறப்பு ஆம்புலன்ஸ் வேனில் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com