

கொளத்தூர்,
கொளத்தூர் வட்டாரத்தில் விளைவிக்கப்படும் மிளகாய் வற்றல் காரம், மற்றும் நெடி கொண்டவை என்பதால் கொளத்தூர் மிளகாய்க்கு சந்தையில் பெரும் மவுசு உள்ளது. இந்த மிளகாய் வத்தலை வாங்குவதற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகளும் , உணவு பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் கொளத்தூருக்கு வருவது வழக்கம்.
இந்த நிலையில் நடப்பாண்டில் கொளத்தூர் வட்டாரத்தில் 1500 ஹெக்டரில் 344 சியாரா என்ற வகை மிளகாய் பயிரிடப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொளத்தூர் வட்டாரத்தில் ஏற்பட்ட தட்ப வெப்ப நிலை மாற்றத்தாலும் வைரஸ் நோய் தாக்குதலாலும் நடப்பாண்டில் மிளகாய் உற்பத்தி கடுமையாக பாதிப் படைந்துள்ளது.
இதனால் நேற்று கொளத்தூர் வார சந்தைக்கு 1000 மூட்டை மிளகாய் வத்தல் மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் மிளகாய் வத்தல் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 அதிகரித்து கிலோ ரூ.110 ஆக விற்பனை ஆனது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொளத்தூர் வார சந்தைக்கு 4 ஆயிரம் முதல் 4500 மூட்டை வரை மிளகாய் வத்தல் விற்பனைக்கு வந்தது. ஆனால் நடப் பாண்டில் மிளகாய் விளைச்சல் குறைந்ததால் தற்போது அதன்வரத்து ஆயிரம் மூட்டைகளாக குறைந்து உள்ளது.