மதுரையில் பரபரப்பு, தி.மு.க. அலுவலகத்தில் இருதரப்பினர் ரகளை, கார் உடைப்பு- 7 பேர் கைது

மதுரையில் தி.மு.க. அலுவலகத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட ரகளையால் பேனர்கள் கிழிக்கப்பட்டன. கார் உடைக்கப்பட்டது. இது தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
Published on

மதுரை,

மதுரை பரசுராம்பட்டி கம்பன் நகரில் தி.மு.க.வின் 26-வது வார்டு அலுவலகம் உள்ளது. அந்த வார்டின் செயலாளராக செங்கிஸ்கான் உள்ளார்.

அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவருக்கும், செங்கிஸ்கான் தரப்பை சேர்ந்த முத்துப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு செங்கிஸ்கான் கட்சி அலுவலகத்தில் சிலருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சுரேஷ், ஆனந்த், உதயகுமார், அப்துல் உள்பட 5 பேர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் முத்துப்பாண்டி எங்கே? என்று கேட்டு செங்கிஸ்கானிடம் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஆயுதங்களால் தி.மு.க. அலுவலகத்தில் இருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து, நாற்காலிகளை சேதப்படுத்தியதாக தெரியவருகிறது.

பதிலுக்கு அவர்களை தாக்குவதற்காக செங்கிஸ்கானுடன் இருந்த அக்பர்சக்கரவர்த்தி, செல்லப்பாண்டி, பால்பாண்டி, பாலாஜி உள்பட 7 பேர் விரட்டினார்களாம். அவர்களிடமிருந்து சுரேஷ் தரப்பினர் தப்பி சென்று விட்டதால், அவர்கள் வந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. சுரேஷ் வீட்டில் இருந்த டி.வி.யையும் உடைத்து சேதப்படுத்தியதாக தெரியவருகிறது.

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட இந்த ரகளை காரணமாக அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் தல்லாகுளம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, தி.மு.க. அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போட்டனர். இதுதொடர்பாக இருதரப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேதப்படுத்தப்பட்ட தி.மு.க. அலுவலகத்தில்தான் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com