பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு சொகுசு பஸ்களில் கட்டணம் குறைப்பு

பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறுகிய தூரங்களுக்கு இயக்கப்படும் அரசு சொகுசு விரைவு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக விழுப்புரம் கோட்டத்தில் இருந்து இயங்கும் 700 பஸ்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
Published on

சென்னை,

தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பழைய பஸ்கள் நீக்கப்பட்டு, புதிய பஸ்கள் இணைக்கப்பட்டுள்ளன. புதிதாக இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலானவை சொகுசு பஸ்களாகும்.

இந்தவகை பஸ்கள் பயணிகளிடையே வரவேற்பை பெற்ற போதிலும், ஏழை, எளிய மக்கள் இந்த சொகுசு பஸ்களில் பயணம் செய்ய போதிய ஆர்வம் காட்டவில்லை. இதற்கு அந்த பஸ்களில் வசூலிக்கப்படும் அதிக கட்டணமே காரணம் ஆகும்.

இந்தநிலையில் அரசு போக்குவரத்து கழகம் அந்த பஸ்களின் குறைந்தபட்ச கட்டணத்தை குறைத்து உள்ளது.

பயணிகளை கவரும் வகையில் புதிய சொகுசு பஸ்களை அரசு போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. விழுப்புரம் கோட்டத்தில் மட்டும் சுமார் 700 சொகுசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் குறுகிய தூரங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சிதம்பரம், வடலூர், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் சொகுசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

கட்டண குறைப்பின்படி 2+2 இருக்கைகள் கொண்ட சொகுசு பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.25-ல் இருந்து ரூ.15 ஆகவும், 2+3 இருக்கைகள் கொண்ட பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.15-ல் இருந்து ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண குறைப்பு 700 பஸ்களில் இன்று (நேற்று) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. முதல் நாளிலேயே பயணிகள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இதுகுறித்து கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து பணிமனை மேலாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு பயணிகள் நன்கு தெரிந்து கொள்ளும் வகையில் பஸ் கண்ணாடிகளில் ஸ்டிக்கர்கள் ஒட்ட வேண்டும். இதன் மூலம் பயணிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரிப்பதுடன், கோட்டத்துக்கான வருமானமும் உயரும்.

மேற்கண்ட தகவலை விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்று உடனடியாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோட்டங்களிலும் கட்டணம் குறைப்பு செய்து, மாற்று போக்குவரத்தை நாடி செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்க முன்வரவேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com