சென்னை,
தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அமைச்சர்கள் தலைமையிலும், பல்வேறு உயர் அலுவலர்களைக் கொண்ட சிறப்பு குழுக்கள், முழு ஊரடங்கு, வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனைகளை அதிகரித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களை மருத்துவமனை, கொரோனா பாதுகாப்பு மையம் மற்றும் அவர்களின் இல்லங்களில் தனிமைப்படுத்தி கண்காணித்தல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பியவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துதல், பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி உள்ளனவா? எனக் கண்டறிய இல்லங்களுக்கே சென்று கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள 12 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்களை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நடத்தி அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு தொற்று கண்டறிதல், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விளைவாக சென்னையில் வைரஸ் தொற்று நாள்தோறும் படிப்படியாக குறைந்து வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் நாள்தோறும் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் மேல் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 13 நாட்களாக தொற்று பாதித்த நபர்களின் எண்ணிக்கை சராசரியாக 1,200 என்ற நிலையில் குறைந்துள்ளது.
இதேபோன்று, பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த
மாவட்ட கலெக்டர்களுடனும், பொது சுகாதாரத்துறையுடனும் ஒருங்கிணைந்து செயல்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகளின் இயக்குநர் எஸ்.பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.