வெளிமாவட்டங்களில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களை அழைத்து வர பஸ் இயக்க நடவடிக்கை - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தகவல்

வெளிமாவட்டங்களில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களை அழைத்து வர பஸ் இயக்க நடவடிக்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தகவல் தெரிவித்துள்ளார்.
Published on

தூத்துக்குடி,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 979 மாணவ-மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ளனர். 107 சிறப்பு மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 309 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது தவிர நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு வசதியாக 13 வட்டாரங்களில் தனியாக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும் தெர்மல் ஸ்கேனர் வைக்கப்பட்டு உள்ளது. கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் வெளி மாவட்டங்களிலும் உள்ளனர். ராமநாதபுரத்தில் 116 பேர், விருதுநகரில் 43 பேர், மதுரையில் 30 பேர், கிருஷ்ணகிரியில் 17 பேர், தர்மபுரியில் 11 பேர், நெல்லையில் 80 பேர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மாணவ-மாணவிகள் உள்ளனர்.

மேற்கண்ட மாவட்டங்களில் அதிக அளவில் மாணவ-மாணவிகள் இருப்பதால் அவர்களை பஸ்சில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. வருகிற 11-ந் தேதி பள்ளி விடுதிகள் திறக்கப்படுவதால், நாளை(புதன்கிழமை) பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்து உள்ளோம்.

வெளிமாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசி உள்ளோம். அவர்கள் விரும்பினால் பஸ்சில் மாணவர்களை அனுப்பி வைக்கலாம்.

இதே போன்று பிளஸ்-1 தேர்வு எழுதும் 319 மாணவர்களும் வெளி மாவட்டங்களில் உள்ளனர். அவர்களையும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இது தவிர எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்களிடமும் எங்கள் ஆசிரியர்கள் குழு தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். மாணவர்கள் தேர்வு மையத்துக்கு அழைத்து செல்ல ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா என்று கேட்டு உள்ளோம்.

பெற்றோர்களின் கோரிக்கைக்கு ஏற்ப உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். நாங்கள் தேர்வு நடத்த 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com