போத்தனூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 65 பவுன் நகை திருட்டு

போத்தனூரில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 65 பவுன் தங்க நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
Published on

போத்தனூர்,

கோவை போத்தனூர் காந்திநகரை சேர்ந்தவர் சைமன் (வயது 47). இவர் பீளமேட்டில் உள்ள தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி விர்ஜீனியா. இவர் கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் கணினி பிரிவு ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய 2 பெண் குழந்தைகளும் குன்னூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள்.

கணவன்- மனைவி 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளை பார்ப்பதற்காக கடந்த 2-ந் தேதி குன்னூர் சென்று விட்டு நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 65 பவுன் தங்கநகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உதவி கமிஷனர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். போத்தனூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்கள் அதிகரித்து வருகிறது. போத்தனூர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவுக்கு என்று தனி இன்ஸ்பெக்டர் இல்லை. அந்த பணியிடம் நீண்டகாலமாக காலியாக உள்ளது. எனவே குற்றப்பிரிவுக்கு இன்ஸ்பெக்டரை நியமிப்பது டன், போத்தனூரில் நடைபெறும் திருட்டு மற்றும் வழிப்பறி குற்றங்களை கட்டுப்படுத்த விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com