பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் என்ஜினீயர் தவறவிட்ட தங்கநகை - ரெயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்

பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் என்ஜினீயர் தவறவிட்ட தங்க நகையை ரெயில்வே போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
Published on

தென்காசி,

சென்னை பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். அவருடைய மனைவி பிருந்தா. என்ஜினீயராக உள்ள இவர்கள் தங்கள் குழந்தையுடன் ராஜபாளையம் அருகே ஆலங்குளத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்காக நேற்று முன்தினம் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ராஜபாளையத்திற்கு வந்தனர். ராஜபாளையம் ரெயில் நிலையம் வந்ததும் அவர்கள் இறங்கி சென்றுவிட்டனர்.

அங்கு சென்று பார்த்தபோது குழந்தையின் கையில் அணிந்திருந்த தங்க பிரேஸ்லெட் நகையை காணவில்லை. உடனடியாக அவர்கள் இதுகுறித்து ராஜபாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரெயில் தென்காசி ரெயில் நிலையம் வந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் மாடசாமி, முருகேசன், அய்யப்பன், கணபதி ஆகியோர் அவர்கள் பயணம் செய்த எஸ்-11 பெட்டியில் சோதனை செய்தனர். அப்போது அவர்களது இருக்கையின் இடையில் நகை சிக்கி கொண்டிருந்தது. அதனை போலீசார் மீட்டு, பிருந்தாவுக்கு தகவல் கொடுத்தனர்.அவர் நேற்று முன்தினம் தென்காசி ரெயில்வே போலீஸ் நிலையம் வந்து நகையை பெற்றுக்கொண்டார். நகையை பெற்றுக்கொண்ட அவர் ரெயில்வே போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com