பெரம்பலூரில் குண்டும், குழியுமான சாலையால் விளையாட்டு அரங்கத்திற்கு செல்வோர் அவதி

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், விளையாட்டு அரங்கத்திற்கு செல்பவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட போலீஸ் அலுவலகம், கோட்ட வன அலுவலகம், கூட்டுறவு மண்டல அலுவலகம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

கலெக்டர் அலுவலகத்திற்கு பின்பகுதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. விளையாட்டு அரங்கத்தில் இருந்து விளாமுத்தூர் பிரதான சாலையை சென்றடையும் மெட்டல் சாலை அருகே மாணவிகளுக்கான மாவட்ட விளையாட்டு விடுதி, பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம், மாவட்ட கிரிக்கெட் மைதானம், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் புதிய கட்டிடம் ஆகியவை அமைந்துள்ளன.

பெரம்பலூர் நகரில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம், உள்விளையாட்டு அரங்கம், கிரிக்கெட் மைதானத்திற்கு விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சிக்கு வந்து செல்பவர்கள், விளையாட்டு பயிற்சிக்காக வந்து செல்வோர், நீச்சல் குளத்திற்கு வந்து செல்வோர் ஆகியோரில் பலர் விளாமுத்தூர் சாலை வழியாகவே மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு சென்று திரும்புகின்றனர்.

ஆனால் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கும், கேந்திரிய வித்யாலயா பள்ளி புதிய வளாகத்திற்கும் இடையில் உள்ள சுமார் 250 மீட்டர் நீளமுள்ள மெட்டல் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கிறது. இந்த சாலையின் வழியே வாகனங்கள் சென்று வருவதற்கு கடினமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கோடை மழையினால் குண்டும், குழியுமான சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது. மேலும் விளையாட்டு விடுதியில் இருந்து தினமும் பயிற்சிக்காக மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு செல்லும் மாணவிகளும், விளையாட்டு பயிற்சி பெறுவோரும், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்கள், கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com