

சூரமங்கலம்,
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 54), விவசாயி. இவருடைய மகன் பிரபாகரன். இவர் பி.இ. படித்துள்ளார். ராஜாவுக்கு தனது நண்பர்கள் மூலம் சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த காந்தி கண்ணன்(41) என்பவர் அறிமுகமானார்.
அப்போது அவர் ராஜாவிடம் அவருடைய மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய அவர் ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகே வைத்து காந்தி கண்ணனிடம் ரூ.2 லட்சம் கொடுத்தார். இதையடுத்து காந்தி கண்ணன் வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.
இந்த மோசடி குறித்து ராஜா சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதிராஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ராஜாவிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த காந்தி கண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்ததாக காடையாம்பட்டியை சேர்ந்த கருணாநிதி(63), ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன்(61) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.