தமிழர் பண்பாட்டில் விருந்தோம்பல்

மக்கள் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதல் இடம் பிடிப்பது உணவே ஆகும்.
Published on

க்கள் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்றில் முதல் இடம் பிடிப்பது உணவே ஆகும். உணவின் அடிப்படைத் தேவையை நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உயிர்ச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களை உண்டு வந்தனர். மேலும் தாம் உண்பதோடு மட்டுமல்லாமல் உணவில்லாமல் வறுமையில் வாடிய ஏழை-எளியவர்களுக்கும் வீட்டிற்கு வரும் புதியவர்களுக்கும் உணவினை வழங்கி அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தனர்.முகத்தை மாறுபட்டு வைத்தாலே விருந்தினர் மனம் வருந்துவர் என்பதால், விருந்தினரை அன்போடு உபசரிக்க வேண்டும் என்பது தமிழர்களின் குறிக்கோளாக இருந்தது. மேலும் அவ்வாறு வரக்கூடிய விருந்தினர்களுக்கு முதலில் உணவு அளித்த பின்னரே தாம் உண்ணுதலை முறையாகக் கடைப்பிடித்தனர்.

தமிழர்கள் புதிதாக வரும் வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாறி விருந்துண்டு செல்வதற்காகவே வீட்டிற்கு முன்பு திண்ணை அமைத்து வீட்டைக் கட்டியுள்ளனர். இல்லத்தில் இருக்கும் மக்கள் விருந்தினரை அன்போடு உபசரித்தனர். குறிப்பாக அக்காலத் தமிழன் வேலை செய்து சேமித்த செல்வத்தின் ஒரு பகுதியைப் பிறருக்கு உணவு அளித்தல் போன்ற செயல்களுக்குச் செலவிட்டான். அவ்வாறு செலவிடுவதற்காகவே செல்வத்தை சேர்த்தான் என்பது பெருமைக்குரியதாகும். பிறருக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே வேலை செய்து பொருள் சேமித்தவன் உலகில் தமிழன் மட்டுமே. இச்செயல் தமிழினத்தின் உயரிய பண்பைக் காட்டுகிறது. தற்போது வீடுகளில் அந்த அமைப்பினைக் காணமுடியவில்லை. நம் பண்பாடுகளினுள் பல மறக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இந்த திண்ணை வீடும் ஒன்றாகும்.

தமிழகத்தின் பெரிய நகரங்களில் அக்காலத்தில் ஏழை-எளியவர்களுக்கு உணவு வழங்குவதற்காக இந்த அறச்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று சிறப்புமிக்க மதுரையில் இருந்தது. அங்கு பல வகை உணவுகள் விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டதாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பலா, வாழை, முந்திரி முதலிய பழங்களும் தானமாகக் கொடுக்கப்பட்டன. பாகற்காய், வாழைக்காய், வழுதுணங்காய் முதலிய காய் வகைகளும், கீரை வகைகளும், இறைச்சி கலந்த சோறும் (பிரியாணி), கிழங்கு வகைகளும், பால், தயிர், மோர் முதலியவைகளும் வழங்கப்பட்டன என்பதை மதுரைக் காஞ்சி என்னும் நூல் எடுத்துரைக்கிறது.

இதன் மூலம் நம் தமிழ் மக்கள் அக்காலத்தில் ஏழை-எளியோருக்கு உணவு வழங்குவதற்காகவே அன்னசத்திரங்களை ஏற்படுத்தி பிறர் பசியைப் போக்கி உள்ளனர் என்பதை அறியமுடிகிறது. அதன் அடிப்படையில் இன்றும் பல இடங்களில் கோவில்களில் அன்னசத்திரங்கள் வைத்து உணவு வழங்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. அரசர்கள் புலவர்களுக்கு மிகச் சிறப்பாக விருந்து கொடுத்து மகிழ்ந்தார்கள். புலவர்கள் அன்று அரசனுக்கு நிகராக அமரும் வகையில் மதிப்பு பெற்றிருந்தனர். புலவர்கள் பாணர் (பாட்டுப் பாடுபவர்கள்), கூத்தர் (நடனம் ஆடுபவர்கள்) ஆகிய முத்தமிழை வளர்த்த கலைஞர்களுக்குச் சிறப்பிடம் தந்தனர் அரசர்கள். அப்பெருமக்கள் அரண்மனையில் சிறந்த முறையில் விருந்து உண்டனர். கரிகால் வளவன் என்ற மன்னன் தன்னைப் பாடி புகழ்ந்த பாணனுக்கும் அவன் உறவினர்களுக்கும் செம்மறி ஆட்டின் இறைச்சி மற்றும் சுட்ட கறியையும் கொடுத்து உண்ணச் செய்தான். பலவகை தின்பண்டங்கள் கொடுத்தான் என்றும் அவன் அளித்த சோறு முல்லை அரும்பை ஒத்திருந்தது என்றும் விருந்து உண்ட பின்பு தெளிந்த இனிய மதுவையும் வழங்கினான் என்றும் பொருநராற்றுப்படை என்னும் நூல் குறிப்பிடுகிறது.

இதன்மூலம் அக்காலத்தில் மன்னர்களும் விருந்தளிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. மேலும் விருந்தில் எளிய உணவைக் கொடுக்காமல் சிறப்பான உணவுகளையே கொடுத்தனர். விருந்து கொடுக்கும் போது தங்கம் மற்றும் வெள்ளியாலான உண்கலங்களில் உணவு வழங்கியுள்ளனர். அக்காலத் தமிழர்கள் விருந்தையும், விருந்தினர்களையும் உயர்வாகக் கருதினார்கள். உலகில் தலைசிறந்த இந்த விருந்து கொடுக்கும் பண்பாட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவன் தமிழனே. மேலும், மன்னர்கள் போரில் வெற்றி பெற்றபொழுது வீரர்களோடு அமர்ந்து உணவு உண்டனர். விருந்தினர்கள் எத்தனை நாள், மாதம், வருடம் தங்கி இருந்தாலும் அரசன் முதல் நாள் எப்படி ஆர்வத்துடன் கவனித்து கொண்டானோ? அவர்கள் திரும்பிச் செல்லும் வரை அதே அன்புடன் அவர்களை உபசரித்தான். மேலும் அவர்கள் திரும்பிச் செல்லும்போது பல பரிசுகளையும், பட்டாடைகளையும் கொடுத்து அவர்களை அனுப்ப மனமின்றி ஏழடி தூரம் அவர்களின் பின் சென்று வழியனுப்பி வைத்தான். எனவே தமிழரின் தனித்துவம் மிக்க பண்பாடாக விருந்து அமைகிறது. இப்பண்பாடு உலகில் வேறெங்கும் இல்லாத பண்பாடு அப்படியே வேறு நாட்டில் விருந்தினர்களுக்கு விருந்தளிக்கும் முறை இருந்தால் அது தமிழன் கற்றுக்கொடுத்தது என்பதில் சந்தேகமில்லை.

தமிழர்கள் பல பண்பாடுகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். அவற்றில் ஒன்று விருந்து. பசியைப் போக்கி அவர்களின் முகம் மலர்வதைக் கண்டு அகமகிழ்ந்தவர்கள் தமிழர்கள். முன்பின் அறியாதவர்களே விருந்தினர்களாக அமைந்தார்கள். மேலும் விருந்தோம்பல் என்பது சிறந்த கலையாகக் கருதப்பட்டது. விருந்தினர்களுக்குத் தனியாகச் சிறந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன. மனிதனின் அடிப்படைத் தேவையான உணவை, அறிமுகம் இல்லாதவர்களுக்கு வழங்கிய தமிழர்களின் மனிதநேயப் பண்பு உலகத்திலேயே தனித்துவம் பெற்றது ஆகும். எனவே பிறருக்கு உணவு கொடுத்து மகிழ்வதில் தன்னேரில்லாதவன் தமிழனே என்பதில் பெருமை கொள்வோம்.

முனைவர் இரா.கீதா, உதவி பேராசிரியர், ராமசாமி தமிழ் கல்லூரி, காரைக்குடி.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com