தமிழகத்தில் மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் - ராமேசுவரத்தில் மத்திய மந்திரி தகவல்

தமிழகத்தில் மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக ராமேசுவரம் வந்த மத்திய மந்திரி தெரிவித்தார்.
தமிழகத்தில் மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் - ராமேசுவரத்தில் மத்திய மந்திரி தகவல்
Published on

ராமேசுவரம்,

மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி குமார் சவுபே நேற்று ராமேசுவரம் வந்தார். பின்னர் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்ற அவருக்கு புனித தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமி-அம்மன் சன்னதியில் அவர் தரிசனம் செய்தார். இதனையொட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்பு உலக பிரசித்தி பெற்ற 3-ம் பிரகாரத்தை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டிற்கு சென்று அவரது அண்ணன் முகமது முத்து மீரா லெப்பை மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அப்துல் கலாமின் குடும்பத்தினர் சார்பில் மத்திய மந்திரிக்கு நினைவு பரிசாக புத்தகம் வழங்கினர். பின்பு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.

முன்னதாக ராமகிருஷ்ணபுரம் விவேகானந்த குடிலுக்கு சென்ற அவரை சுவாமி பிரணவநந்தா வரவேற்றார். அப்போது அவர், மீனவர்கள் அதிகம் வசிக்கும் ராமகிருஷ்ணபுரம், நடராஜபுரம், புதுரோடு பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்று மத்திய மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து உரிய நடவடிக்க எடுப்பதாக தெரிவித்த மத்திய இணை மந்திரி தொடர்ந்து கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ள மருத்துவ கல்லூரி விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 4 மருத்துவ கல்லூரிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறையில் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பா.ஜ.க. மாவட்ட தலைவர் முரளிதரன் உடனிருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com