பவானி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணி அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்

பவானி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணியை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்தார்.
Published on

பவானி,

பவானி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி நடராஜபுரம், ஊராட்சிக்கோட்டை மற்றும் தொட்டிபாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் தார்சாலை, குடிநீர் மேல்நிலை தொட்டி, சாக்கடை வசதி உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

விழாவில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு பணியினை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் பெண்களுக்கான முக்கியத்துவம் அதிக அளவில் இருந்தது. அதேபோல தற்போது எடப்பாடி பழனிசாமி நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதால் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குகிறோம்.

சென்னையில் காற்று மாசு ஏற்படாத வண்ணம் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். தற்போது அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு கூடிய விரைவில் தீவிர அறுவை சிகிச்சை மையம், அரங்கு அமைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அதிக அளவில் வெற்றியைக் குவிக்கும். வருகிற ஆகஸ்டு மாதம் கங்கை காவிரியை இணைக்கும் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.9 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 7 இடங்களில் மத்திய மாநில அரசின் உதவியோடு ஒருங்கிணைந்த சாய சுத்திகரிப்பு நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.

விழாவில் பவானி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் எஸ்.எம்.தங்கவேல், பவானி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.கே.விஸ்வநாதன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் செல்வி, குருப்பநாயக்கன் பாளையம் முன்னாள் ஊராட்சி தலைவி ஈஸ்வரி குமாரசாமி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com