

விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டையை அடுத்த ஏமம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணஜெகநாதன். இவர் அதே ஊரில் தனது தாய் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரக்கோரி ஏமம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த கார்த்திக்ராஜாவை அணுகினார். பட்டா மாற்றம் செய்து தர ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று கார்த்திக்ராஜா கேட்டுள்ளார். இதுபற்றி கல்யாணஜெகநாதன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கூறி னார். இதையடுத்து கடந்த 30.12.2014-ந்தேதி அன்று கல்யாணஜெகநாதன் கார்த்திக்ராஜாவிடம் ரூ.5 ஆயிரம் பணம் கொடுத்தார். அந்த பணத்தை வாங்கும் போது கார்த்திக்ராஜாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரத்தில் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ராஜாவுக்கு (வயது 36) 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார்.