

கோவை,
பொள்ளாச்சியில் 19 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து புகார் கொடுத்த அந்த மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை செந்தில் (33), வசந்தகுமார் (26), மணிவண்ணன் (25), பார் நாகராஜ் (28), பாபு (26) ஆகிய 5 பேர் வழிமறித்து வழக்கை வாபஸ் பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் அவர்கள் 5 பேர் மீதும் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார் நாகராஜ் உள்பட 4 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மணிவண்ணனை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அவருக்கு போலீஸ் காவல் முடிந்ததால், நேற்று போலீசார் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
அத்துடன் அவரை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, நீதிபதி நாகராஜன், எதற்காக மேலும் 3 நாட்கள் கேட்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு போலீசார் மணிவண்ணனிடம் இந்த சம்பவம் குறித்தும், அதில் தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டி உள்ளது என்றனர்.
இதைத்தொடர்ந்து அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிபதி நாகராஜன் அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் மணிவண்ணனை பாதுகாப்புடன் ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.