கோவை மாவட்டத்தில் மழை முடியும் வரை ஆற்றங்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு

கோவை மாவட்டத்தில் மழை முடியும் வரை ஆற்றங்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பெய்வதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, வி.பி.கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

கோவை, நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழையில் பொதுமக்கள் யாரும் பாதிக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி நமது மாவட்டத்தில் சிதிலம் அடைந்த மற்றும் பழுதான மழைநீர் வடிகால், சிறுபாலங்கள் உடனடியாக பழுது பார்க்கவும், மழைநீர் வடிகால்களுக்கு இணைப்பு இல்லாத இடங்களை கண்டறிந்து இணைப்பு வடிகால் அமைக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க வேண்டும். பொதுமக்களும் தங்களால் முடிந்த வரை மழைநீரை சேமிக்க அதற்கான அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.

நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள நியமிக்கப்பட்டு உள்ள அதிகாரிகள், பருவமழை முடியும்வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளிலேயே முகாமிட்டு கண்காணிக்க வேண்டும். அதுபோன்று பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் நொய்யல் மற்றும் பவானி ஆற்றங்கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தகவல் மையம் அமைக்கப்பட்டு வெள்ள நிவாரண நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த கிராமங்களிலேயே இருந்து உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மழையால் சேதம் அடைந்த பாலங்கள், சாலைகள், பொது கட்டிடங்கள் ஆகியவற்றின் விவரங்களை உடனடியாக சேகரித்து, அதை சரிசெய்ய திட்ட மதிப்பீடு தயார் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குனர் மகேஸ்வரன், மாநகராட்சி தனி அதிகாரி ஷ்வரன் குமார் ஜடாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன், மாவட்ட திட்ட இயக்குனர் ரூபன் சங்கர் ராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com