கோவை மாவட்டத்தில் தடையை மீறி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எம்.எல்.ஏ. உள்பட 2,349 பேர் கைது

கோவை மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ உள்பட 2,349 பேர் கைதானார்கள்.
Published on

கோவை,

கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தி.மு.க. பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருவதாகவும், இதனை கண்டித்து கோவை மாவட்டம் முழுவதும் உள்ள உள்ளாட்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் கோவை மாவட்ட தி.மு.க. அறிவித்து இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சமூக இடைவெளியை கடைபிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி அளிக்காததால் எம்.எல்.ஏ. கார்த்திக் உள்பட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க.வினர்கைதானார்கள்.

கோவை மாநகராட்சி 27, 42-வது வார்டு தி.மு.க. சார்பில் நடந்த போராட்டத்தில் பகுதி செயலாளர் முரளிதரன், துடியலூரில் டி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் கட்சி கொடிகளை கைகளில் வைத்திருந்தனர். கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் உள்பட 57 இடங்களில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 801 பேர் கைது செய்யப்பட்டனர்.

2,349 பேர் கைது

பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதானார்கள். மேட்டுப்பாளையத்தில் இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அஸ்ரப் அலி, முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், சூலூரில் ஒன்றிய பொறுப்பாளர் தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி நேரில் வந்து ஆதரவு தெரிவித்ததாக தி.மு.க. நிர்வாகிகள் கூறினர். கோவை மாவட்டம் முழுவதும் தடை யை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 2,349 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com