

திண்டுக்கல்,
சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால், திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று 30 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதில் சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுவதற்காக சென்ற நிலக்கோட்டை டிரைவர், சென்னைக்கு சிகிச்சைக்காக சென்ற ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மற்றும் அவருடைய தாய் ஆகியோர் சென்னையில் நடந்த பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அங்கேயே அவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர சென்னையில் இருந்து வந்தவர்களில் நிலக்கோட்டை பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 பேரும், வத்தலக்குண்டு பகுதியில் 2 ஆண்களும், சின்னாளப்பட்டி பகுதியில் தம்பதி-மகன் உள்பட 6 பேரும், திருப்பூரை சேர்ந்த வாலிபர் மற்றும் 9 மாத பெண் குழந்தை ஆகியோருக்கு தொற்று உறுதியானது. இதுதவிர மும்பை மற்றும் கத்தார் நாட்டில் இருந்து வந்த 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நத்தம் அருகே கொரோனாவால் இருந்த முதியவரின் மகன், மகள் மற்றும் பேத்தி, வடமதுரை பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி, குஜிலியம்பாறையை சேர்ந்த 40 பெண் ஆகியோருக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் கொரோனா பரவியுள்ளது. இதேபோல் நிலக்கோட்டையை சேர்ந்த 50 வயது ஆண், திண்டுக்கல்லை சேர்ந்த 31 வயது பெண், நத்தத்தை சேர்ந்த டிரைவர், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், வேடசந்தூரை சேர்ந்த பெண்ணுக்கும் தொற்று உறுதியானது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று இரவு வரை ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிப்பட்டு உள்ளது. கடந்த 3 மாதங்களில் மாவட்டத்தில் அதிகபட்ச பாதிப்பு இதுவாகும்.