தேர்தலில், வணிகர்களின் ஓட்டு யாருக்கு? இந்த வார இறுதியில் அறிவிப்பதாக தஞ்சையில், வெள்ளையன் பேட்டி

தேர்தலில், வணிகர்களின் ஓட்டு யாருக்கு என இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று தஞ்சையில் வெள்ளையன் கூறினார்.
Published on

தஞ்சாவூர்,


தஞ்சை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கூட்டம் தஞ்சையில் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமையில், செயலாளர் ரவி முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் பேரவை மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சாதி, மதம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. கடந்த 36 ஆண்டுகளாக தேர்தலின்போது யாருக்கு வாக்களிப்பது என முடிவு எடுத்தது கிடையாது. இந்த தேர்தலிலும் நாங்கள் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் இந்த தேர்தலில் ஒரு கட்சிக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று சொல்ல இருக்கிறோம்.


சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, ஆன்லைன் வர்த்தகம் போன்றவற்றால் வியாபாரிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். வங்கிகளும், பெரும் முதலாளிகளுக்குத்தான் கடன்கள் வழங்குகின்றன. இதேபோல் விவசாயமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள், வணிகர்கள் கடும் பாதிப்படைந்து உள்ளனர்.

உலக வர்த்தக ஒப்பந்தத்தால் நாடு முன்னேறவில்லை. சுயதொழில், சில்லறை வணிகத்தை வெளிநாட்டினர் கைப்பற்றத்தான் உலக வர்த்தக ஒப்பந்தம். ஆனால் இதற்கு நமது அரசியல்வாதிகள் துணை நிற்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு கதவு திறக்கப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் கதவை முற்றிலும் கழற்றி வைத்து விட்டனர்.


எனவே சில்லரை வணிகத்தை காப்போம், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யவோம் என்பது உள்ளிட்ட எங்கள் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளோம். அதை யார் நிறைவேற்றுவோம் என்கிறார்களோ? அவர்கள் எழுத்து மூலம் எங்களுக்கு பதில் தரவேண்டும்.

அதன்படி தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆதரவு தெரிவித்துள்ளது. இன்னும் மற்ற கட்சிகள் ஆதரவு தெரிவிக்கிறதா? என பார்ப்போம். இந்த வார இறுதிக்குள் யாருக்கு வணிகர்கள் வாக்களிப்பது என்பது அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com