ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 8,441 ஆக அதிகரிப்பு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 361 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,441 ஆக அதிகரித்துள்ளது.
Published on

வேலூர்,

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டன.

அதைத்தொடர்ந்து அவர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில், 3 டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 14 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களின் குடும்பத்தினர், நெருங்கி பழகிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட உள்ளன.

வேலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கார்த்திகேயனுக்கு கடந்த 19-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதியானது. அதைத் தொடர்ந்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதையடுத்து 20-ந்தேதி கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் நெருங்கி பழகிய நபர்கள் 30 பேருக்கு மாநகராட்சி அலுவலகம் அருகே நடந்த பரிசோதனை முகாமில் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. குடும்பத்தினருக்கு தொற்று இல்லை. அவருடன் பழகிய 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதைத்தவிர வேலூர் அல்லாபுரத்தில் பச்சிளம் ஆண் குழந்தை, சத்துவாச்சாரியில் 5 வயது பெண் குழந்தை, காந்திரோடு கல்யான்பஜாரில் 8 வயது சிறுவன், கருகம்புத்தூரில் 10 வயது சிறுமி, காந்திரோட்டில் 82 வயது முதியவர், சத்துவாச்சாரியில் 14 பேர், மாநகராட்சி பகுதியில் 85 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 146 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4,593 ஆக அதிகரித்து உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,120 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,476 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்குநாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 728 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை 26,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com