கிள்ளை பகுதியில், மழை விட்டும் வடியாத தண்ணீர் - கிராம மக்கள் அவதி

கிள்ளை பகுதியில் மழை விட்டும் தண்ணீர் வடியாததால் கிராம மக்கள் அவதியுறுகின்றனர்.
Published on

அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தீவிரமாக பெய்தது. இதனால் பல இடங்களில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நின்றது. அந்த வகையில் கிள்ளை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கன மழையால், கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், எம்.ஜி.ஆர் நகர், தளபதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.

இந்த பகுதி கடற்கரையோரம் உள்ளதால் கடைமடை வடிகால் பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் இங்கிருந்து தண்ணீர் வெளியேற போதிய வடிகால் வசதி இல்லை. அதனால் தான் குடியிருப்புகளை சூழ்ந்தபடி மழைநீர் நிற்கிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக எடப்பாளையம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம், அங்கன்வாடி மையம், குடிநீர் கிணறு ஆகியவற்றை சுற்றியும் மழைநீர் தேங்கி நிறகிறது. அங்கன்வாடி மையத்தை சுற்றி மழைநீர் நிற்பதால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்ல அவதியுறுகின்றனர். கடந்த இரு தினங்களாக மழைவிட்டும் தண்ணீர் வடியாததால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி கிராம மக்களுக்கு டெங்கு உள்பட பல்வேறு காய்ச்சல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் தேங்கியுள்ள மழைநீரில் விஷஜந்துக்கள் நிறைய உள்ளதால் மக்கள் தேங்கியுள்ள நீரை கடந்து செல்ல அச்சப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் இப்பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வாக மழைநீர் வடிய வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com