கூடலூர்,
கூடலூர் நகராட்சி, திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இப்பகுதியில் தினசரி 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. அத்துடன் கூடலூரில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்களுக்கு கூலித்தொழிலாளர்கள் ஜீப்புகளில் வேலைக்கு சென்று வருகின்றனர். சிலர் தனியார் பஸ்களிலும் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இந்த பஸ்கள் குமுளி வரை செல்கின்றன. பின்னர் அங்கிருந்து வேறு பஸ்கள் மூலம் தொழிலாளர்கள் கேரள மாநிலத்துக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கூடலூரில் இருந்து குமுளி உள்ளிட்ட ஊர்களுக்கு இயக்கப்படும் சில தனியார் பஸ்கள் விரைவாக செல்ல வேண்டும் என்பதற்காக அதிவேகமாக செல்கின்றன.
அப்போது முன்னால் செல்லும் வாகனங்களையும் தனியார் பஸ் டிரைவர்கள் முந்திச்செல்ல முயல்கின்றனர். இதனால் அந்த பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் பஸ்களால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலை விபத்து ஏற்பட்டால் மட்டுமே சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் அதிவேகமாக செல்லும் வாகனங்களை கண்காணித்து அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தால் விபத்துகள் ஏற்படுவதை தடுக்கலாம். பயணிகளும் அச்சமின்றி பஸ்களில் பயணம் செய்வார்கள். எனவே அதிவேகமாக செல்லும் வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.