சேலத்தில், கடந்த 4 மாதங்களில் போக்குவரத்து விதிமுறைகள் மீறிய 31,400 பேர் மீது வழக்குப்பதிவு ரூ.50¼ லட்சம் அபராதம் வசூல்

சேலத்தில், கடந்த 4 மாதங்களில் போக்குவரத்து விதி முறைகள் மீறிய 31 ஆயிரத்து 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Published on

சேலம்,

சேலத்தில் விபத்துகளை தடுக்க மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், வாகனங்களில் அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல், அதிவேகமாக செல்லுதல் என போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சேலம் மாநகரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 31 ஆயிரத்து 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 19 ஆயிரத்து 700 பேர் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போக்குவரத்து உதவி கமிஷனர் ஜூலியஸ் கிறிஸ்டோபர் கூறியதாவது:-

சேலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை நடந்த சாலை விபத்துகளில் 40 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 25 சதவீதம் வரை குறைவாகும். குறிப்பாக நெய்க்காரப்பட்டி, மாசிநாயக்கன்பட்டி, அரியானூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பைபாஸ் சாலைகளில் நடந்த விபத்துகளில்தான் 31 பேர் இறந்துள்ளனர். இந்த சாலையை கவனக்குறைவாக கடக்கும் போது விபத்தில் சிக்கி அதிகம் பேர் இறக்கின்றனர்.

இவர்கள் சர்வீஸ் சாலையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட வேண்டும். செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக ஆட்களை ஏற்றி செல்லுதல் உள்ளிட்ட விதிகளை மீறியதற்காக 2,710 பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யுமாறு வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com