பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம் மதுவுக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தகவல்

திருப்போரூர் அருகே பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தவர் மதுவுக்காக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பூட்டிய வீட்டில் தொழிலாளி பிணம் மதுவுக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் தகவல்
Published on

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த எம்.ஜி.ஆர். நகர் கிரிவலப்பாதையில் உள்ள பூட்டிய வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இறந்து கிடந்தவர் யார் என்று தெரியாமல் போலீசார் திணறி வந்தனர். டி.ஐ.ஜி. தேன்மொழி, செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் ஆகியோரின் உத்தரவின்பேரில் திருப்போரூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

உடல் மீட்கப்பட்ட இடத்தில் செல்போன் வாங்கியதற்கான ரசீது இருந்தது. அதில் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போலீசார் விசாரணையை தொடங்கினர்.

செல்போன் வாங்கிய கேளம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளரிடம் நேரடியாக சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் கொலையாளி புதிதாக வாங்கிய செல்போன் எண்ணை வைத்து அதில் இருந்து தொடர்பு கொண்ட மற்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த குண்டூர் மாவட்டம் சந்தனம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அதில் ஒரு சில எண்ணில் மட்டும் அதிக அழைப்புகள் தொடர்ந்து சென்றது. அந்த எண்ணை சோதித்த தனிப்படை போலீசார் அவர்களை விசாரிக்கும்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தங்கம், வெள்ளி கடத்தலில் ஈடுபட்டு ஏமாற்றும் கும்பல் என்ற திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது. தங்கம் கடத்தும் கும்பலுக்கும் இறந்து கிடந்த நபருக்கும் என்ன தொடர்பு உள்ளது என விசாரிப்பதற்காக தனிப்படை போலீசார் அந்த கும்பலை தேடி ஆந்திர மாநிலம் சென்றனர். சம்பந்தப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணையை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாக சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒருவர் சரண் அடைந்தார். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சந்தனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் துர்காராவ் (வயது 29). அதே பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. கட்டுமான தொழிலாளிகள். திருப்போரூர் வந்த அவர்கள் எம்.ஜி.ஆர். நகர் கிரிவலப்பாதையில் வீடு வாடகைக்கு எடுத்து கட்டுமான தொழில் செய்து வந்தனர்.

கொலை நடந்த அன்று இருவரும் மது குடித்துள்ளனர். மதுவை வைத்து விட்டு துர்காராவ் கடைக்கு சென்று விட்டார். அவர் வருவதற்குள் ஆஞ்சநேயலு மதுவை குடித்து விட்டார். திரும்பி வந்த துர்காராவ் கோபத்தில் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். பதிலுக்கு ஆஞ்சநேயலுவும் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். ஆத்திரம் அடைந்த துர்காராவ் சரமாரியாக தாக்கியதில் ஆஞ்சநேயலு பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து துர்காராவ் வீட்டை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார் என்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. தங்கம், வெள்ளி கடத்தலில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com