விழுப்புரம்,
மரக்காணம் அருகே கூனிமேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ மர்ம நபர்கள், கதவை உடைத்து உள்ளே புகுந்து கணினி, நாற்காலிகள், குளிரூட்டும் பெட்டி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.
இதேபோல் கூனிமேட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் பூட்டை உடைத்தும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போயின. இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க போலீசார், பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மரக்காணம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை செய்ததில் அந்த காரினுள் சுத்தியல், கடப்பாரை போன்ற ஆயுதங்கள் இருந்தன.
மேலும் காரில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் 3 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் கூனிமேட்டை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் மாரிமுத்து (வயது 26), அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவர் மற்றும் அரியூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (22) என்பதும் கூனிமேடு அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப பள்ளி, சிறு தொழில் நிறுவனங்கள், தேவாலயம், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பு கொட்டகையில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து மாரிமுத்து உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த டி.வி., குளிரூட்டும் பெட்டி, கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும், திருடிய பொருட்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்திய சரக்கு வாகனம், கார் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.