மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேச்சு

மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என பிரசார கூட்டத்தில் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார்.
மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் பேச்சு
Published on

கருமத்தம்பட்டி,

கோவை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து சோமனூர் அருகே உள்ள கோம்பகாட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பிரசார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் கோம்பக்காடு என்.துரைசாமி தலைமை தாங்கினார். மாநில அவைத்தலைவர் பி.ஆர்.டி.சென்னியப்பன் மாவட்ட செயலாளர் பிரிமியர் செல்வம், மாவட்ட இணை செயலாளர் ஆடிட்டர் எஸ்.சேதுராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் சேடபாளையம் பாலு வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ந.பழனிசாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி.மனோகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பி.எஸ்.ராமசாமி, ம.தி.மு.க வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தகுமார், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

தொடர்ந்து கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கொங்கு மண்டலத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடபட்டிருக்கிறது. இதனால் லட்சகணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து இருக்கிறார்கள். இதற்கு மத்திய, மாநில அரசு தான் காரணம். இதனால் கொங்கு மண்டலமே தொழில் துறையில் ஸ்தம்பித்து கிடக்கிறது. மக்கள் அத்தியாவசிய தேவைக்கே அல்லல்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தொழில் துறையினர், தொழிலாளர்கள், விவசாயிகள், விசைத்தறியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். இந்த நிலைமாற மக்கள் அனைவரும் மத்தியிலும் மாநிலத்திலும் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகம் எங்கும் பிரசாரத்தின் போது மக்கள் காட்டுகிற எழுச்சி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து மக்களை சந்தித்து நமது கூட்டணி கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றிக்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com