சென்னை,
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கக்கூடிய மாற்றம் வர இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் தவறான தகவலை பரப்பி இருக்கிறார்கள். அதனை பொய்யாக்கி மத்தியில் பா.ஜனதா அல்லாத மதசார்பற்ற அரசு அமையும். தமிழகத்தில் 37 இடங்களில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வெற்றிபெறும்.
நேற்று வெளியான கருத்துக்கணிப்பில் 2 டி.வி. நிறுவனங்கள் வெளியிட்ட கணிப்புகளுக்கு இடையே 100 இடங்கள் வேறுபாடு உள்ளன. உண்மையான கருத்துக்கணிப்பு என்றால் 5 தொகுதிகளுக்குள் தான் வித்தியாசம் வரும்.
தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்காக எந்த வன்முறையிலும், எந்த தவறுகளையும் செய்ய மோடி முன்வருவார். மோடி, அமித்ஷாவின் அத்துமீறல்களை தலைமை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என்று தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர் அசோக் லாவசா கூறியிருக்கிறார். தான் கூறிய குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் அதனை பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே நமது நண்பர்கள் உயிரை பணயம் வைத்து வாக்கு எண்ணிக்கையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
2004-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 255 இடங்கள் கிடைக்கும் என்றார்கள், ஆனால் 187 இடங்கள் தான் கிடைத்தது. காங்கிரசுக்கு 183 இடங்கள் தான் என்றார்கள், ஆனால் 219 இடங்கள் பெற்றோம். ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு 28 பேரை சந்தித்து கருத்துக்கணிப்பு கொடுத்தால் அது ஏற்புடையது அல்ல.
சென்னையில் குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது. எங்கள் வீட்டுக்கு மஞ்சள் நிறத்தைவிட மோசமாக ஈஸ்ட்மென் நிறத்தில் குடிநீர் வருகிறது. அந்த தண்ணீரில் குளித்தால் நோய் வரும். ஏரிகளை தூர்வாரியிருந்தால் தண்ணீர் பிரச்சினை வந்திருக்காது. தமிழக அரசு மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தவே இல்லை. குடிநீர் பிரச்சினையில் மக்கள் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை காலத்தைவிட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.
ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை அனைத்து மாவட்ட தலைநகரங்களில் அமைதி பேரணி நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில பொதுச்செயலாளர் எம்.ஜோதி, மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா மற்றும் பலர் உடன் இருந்தனர்.