நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம்: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்ததும் புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Published on

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் ஆகியோரை ஆதரித்து புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் நேற்று காலை தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான சர்வாதிகார ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது. காங்கிரஸ் சார்பில் புதுவை எம்.பி. தொகுதியில் போட்டியிடும் வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வெங்கடேசன் ஆகியோருக்கு ஆதரவு கேட்டு உங்களை நாடி வந்துள்ளேன். ஏதோ தேர்தலுக்காக மட்டுமல்லாமல் என்றைக்கும் உங்களோடு இருப்பவர்கள் நாங்கள்தான் என்ற உரிமையில் உங்களை தேடி வந்துள்ளேன்.

புதுவை எனக்கு புதிதல்ல. நானும் புதுவைக்கு புதியவனல்ல. கடந்த ஆண்டு நம்மைவிட்டு கருணாநிதி பிரிந்தார். அந்த நேரத்தில் தமிழக ஆட்சியாளர்கள் தங்கள் கீழ்த்தரமான புத்தியை வெளிப்படுத்தினர்.

அந்த நேரத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மறைந்த தலைவர் கருணாநிதிக்கு பல சிறப்புகளை அறிவித்தார். தலைவருக்கு வெண்கல சிலை, புதுவையில் ஒரு சாலைக்கு அவரது பெயர், காரைக்கால் புறவழி சாலைக்கு அவரது பெயர், பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதற்காக தமிழக மக்கள் சார்பிலும், தி.மு.க. சார்பிலும், கருணாநிதியின் மகனாகவும் முதல் -அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

1942-ல் கருணாநிதி திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பினை உருவாக்கினார். அப்போது புதுவையை சேர்ந்த பாவேந்தர் பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் கிடைத்த 5-வது நாள் பாரதிதாசன் கருணாநிதிக்கு பதில் கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில் பகைக்கூட்டத்தை கிழித்தெறிவோம் என்று கூறியிருந்தார். இப்போது நாமும் அதற்காகத்தான் கூடியுள்ளோம்.

இதே புதுவையில் கருணாநிதி கடுமையாக தாக்கப்பட்டார். நடுரோட்டில் உருட்டிவிட்டார்கள். அண்ணா தலைமையில் திராவிட இயக்க மாநாடு புதுவையில் நடக்கிறது. அப்போது நடந்த நாடகத்தில் இளைஞரான கருணாநிதி சிவகுரு வேடம் ஏற்று நடித்தார். நாடகம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரத்தில் சில கயவர்கள் அவரை ஓடஓட விரட்டி அடித்து துன்புறுத்தினார்கள். அவர் ரோட்டில் வீழ்ந்ததும்தான் சென்றார்கள். அவரை நல்ல இதயம் கொண்ட ஒரு குடும்பம் காப்பாற்றி அன்று இரவு முழுவதும் தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தது.

அந்த செய்தியை கேட்ட பெரியார் அதிகாலையில் வந்து கருணாநிதியை பார்த்தார். தனது கைப்பட அவரது காயங்களுக்கு மருந்துபோட்டார். தனது குடியரசு பத்திரிகையில் பணிபுரிய அழைத்தார். பெரியாரையும், கருணாநிதியையும் இணைத்தது இந்த புதுச்சேரிதான். அதனால்தான் புதுச்சேரியின் உரிமைக்கு கருணாநிதி முதன்முதலில் குரல் கொடுத்தார்.

புதுச்சேரியை தமிழகத்தோடு இணைக்க முற்பட்டபோது இணைப்பு எதிர்ப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின்போது தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் கைகோர்த்து நின்றன. அதே கூட்டணிதான் இப்போது இந்தியாவை காப்பாற்ற உருவாகியுள்ளது. இது 40 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கூட்டணி.

நமது நாடாளுமன்ற வேட்பாளர் வைத்திலிங்கத்தை எதிர்த்து நிற்பவர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ரங்கசாமியைப்பற்றி மறைந்த ஜெயலலிதா என்னென்ன சொன்னார்? கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைத்தவர், நம்பிக்கை துரோகம் செய்தவர், என்.ஆர்.காங்கிரசுக்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம் என்று ஜெயலலிதா பேசினார்.

அந்த என்.ஆர்.காங்கிரசுக்கு இப்போது அ.தி.மு.க. ஆதரவு தருகிறது. சென்ற தேர்தலின்போது தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்த ஜெயலலிதா, மோடியா? இந்த லேடியா? பார்ப்போம் என்று கர்ஜித்தார். இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அ.தி.மு.க. ஆட்சியைப்பற்றி எப்படியெல்லாம் விமர்சனம் செய்தனர்.

தமிழக அமைச்சர்கள் பற்றி ஊழல் பட்டியல் தயாரித்து டாக்டர் ராமதாஸ் கவர்னரிடம் கொடுத்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம் என்றார். அவரைப்போல் தி.மு.க. கூட அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யவில்லை. ஆட்சியாளர்கள் பற்றி கேவலமாக கொச்சைப்படுத்தி மூளை இல்லாதவர்கள் என்றெல்லாம் பேசினார்கள். டயர் நக்கிகள் என்றுகூட சொன்னார்கள். அப்படிப்பட்டவர்கள் இப்போது கூட்டு சேர்ந்துள்ளனர். அந்த கூட்டணி புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டு.

தமிழகத்தைபற்றி புதுவை மக்கள் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துள்ளர்கள். பொல்லாத ஆட்சிக்கு ஒரே சாட்சி பொள்ளாச்சி. பொருந்தாத கூட்டணிக்கு இந்த புதுச்சேரியே சாட்சி. இந்த துரோக கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகிவிட்டார்கள். கடந்த தேர்தலின்போது மோடி வானத்தை கிழிப்போம், வைகுண்டத்தை காட்டுவோம் என்றார். ஏதாவது நடந்ததா? படித்த, பட்டதாரி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம் என்றார். யாருக்காவது வேலை கிடைத்ததா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம் என்றார். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்றார்கள். அதில் ரூ.15 ஆயிரமாவது வந்ததா? 15 காசாவது வந்ததா? வரும் ஆனா வராது என்று வடிவேலு நகைச்சுவையாகவே இது உள்ளது.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளை குறிப்பிடவில்லை. மாநில உரிமைகளை பெற்றுத்தருவோம் என்று கூட கூறவில்லை. நீட் தேர்வு பற்றி ஒரு வார்த்தைகூட இல்லை. 2030-ல் இந்திய பொருளாதாரத்தில் சிறந்த நாடாக மாறுமாம். 2032-ல் அமெரிக்க பொருளாதாரத்தைப்போல் இந்திய பொருளாதாரம் இருக்குமாம். 2022-ல் அனைவருக்கும் வீடு கிடைக்குமாம். 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாகிவிடுமாம். இவை அனைத்தும் அவர்களது கதை, கற்பனைதான்.

பிரதமராக மோடி கடந்த 5 வருடமாக இருக்கிறார். இப்போதுதான் அவர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவர் இந்தியாவில் இருந்ததைவிட வெளிநாட்டில் இருந்ததுதான் அதிகம். எனவே அவரை வெளிநாடு வாழ் பிரதமர் என்றே அழைக்கலாம். 5 வருடம் வெளிநாட்டில் சுற்றியவர் இப்போதுதான் நாட்டை சுற்றுகிறார். கடந்த 5 வருடமாக அவர் மக்களை ஏமாற்றி வருகிறார். எனவேதான் நான் அவரை மோடி என்று சொல்லாதீர்கள். மோசடி என்று சொல்லுங்கள் என்று கூறிவருகிறேன்.

கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின்போது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவோம் என்று அப்போது என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியது. அதன்பின் 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் அதே வாக்குறுதியை ரங்கசாமி மீண்டும் கொடுத்தார். இதுபற்றி அவரது எம்.பி. நாடாளுமன்றத்தில் பேசியது உண்டா? மோடிதானே பிரதமராக இருந்தார். அவரது கூட்டணியில்தானே நீங்கள் இருந்தீர்கள்? அப்போது ஏன் மாநில அந்தஸ்து கேட்கவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கருணாநிதிதான் முதன் முதலில் கேட்டார்.

தமிழகத்துக்கு ஒரு எடப்பாடி என்றால் புதுவைக்கு ஒரு கிரண்பெடி. நாட்டை நாசமாக்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திலும் கவர்னர் ஒரு தனி ஆட்சி நடத்துகிறார். அதை என்னவென்று கேட்க தமிழக முதல்-அமைச்சருக்கு தகுதியில்லை. புதுவை கவர்னரை நாராயணசாமி தட்டிக்கேட்கிறார். எடப்பாடி போன்று அவர் கைகட்டி நிற்கவில்லை.

இலவச அரிசி, கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், முதியோர் உதவித்தொகை, ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட 39 கோரிக்கைகளுக்காக கவர்னர் மாளிகை முன்பு நடுரோட்டில் உட்கார்ந்தார். நான் உள்பட இந்தியாவில் பல தலைவர்கள் அவரை வந்து சந்தித்து ஆதரவு அளித்தோம். அப்போது இந்த ரங்கசாமி எங்கே போனார்? அ.தி.மு.க. எங்கே போனது?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தருவோம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உறுதியாக அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும். புதுவை மக்களுக்கு இதில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் ராகுல்காந்தி தான் பிரதமராக போகிறார்.

கிரண்பெடியின் ஆணவத்தை அடக்கவும், மக்களாட்சி சிறப்பாக தொடரவும் எங்களுக்கு வாக்களியுங்கள். மாநில அந்தஸ்துக்காக நானும் உங்களிடம் உறுதிமொழி தந்து உள்ளேன். நாங்கள் செய்வதைத்தான் சொல்வோம். சொன்னதைத்தான் செய்வோம். அந்த நம்பிக்கையில்தான் கருணாநிதி இல்லாமல் தேர்தலை சந்திக்கிறோம்.

தலைவர் கருணாநிதி மறைந்தபோது அவரது உடலை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய விரும்பினோம். இதற்காக அரசாங்கத்துக்கு கடிதம் எழுதினோம். ஆனால் பதிலே வரவில்லை. நேரம் நெருங்க நெருங்க என்ன செய்வது என்று யோசித்தோம். இதற்காக நானே சென்று முதல்-அமைச்சரை சந்தித்து கடிதம் கொடுத்தேன். அப்போது ஏதேதோ காரணம் கூறினார்கள்.

எம்.ஜி.ஆருக்கே தலைவராக திகழ்ந்தவர், பெருந்தலைவர் காமராஜருக்கு மணிமண்டபம் அமைத்தவர், வள்ளுவர் கோட்டம், 133 அடி உயர சிலை அமைத்தவர், செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர், பல பிரதமர்களை கைகாட்டியவர், ஜனாதிபதிகளை உருவாக்கியவர், 5 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்தவர் என்பதையெல்லாம் எடுத்துக் கூறியும், அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய இடம் தர மறுத்து விட்டனர்.

இதனால் வேறுவழியின்றி இரவோடு இரவாக நீதிமன்றம் போனோம். முக்கியமான பிரச்சினை என்று விசாரணை கேட்டோம். மறுநாள் காலையில் ஐகோர்ட்டில் விசாரணை நடந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்த நிலையில் நாங்கள் கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருந்தோம். சிலர் வேறு இடம்கூட பார்க்கலாம் என்றார்கள்.

அந்த நேரத்தில் தான் நமக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. அது எங்கள் காதில் தேனாய் பாய்ந்தது. ஆனால் இப்போது ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்ட வழக்கு இருந்ததால் கருணாநிதிக்கு இடம் தர மறுத்ததாக கூறுகிறார்கள். இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். வழக்கு இருந்ததே தவிர தடை ஏதும் கிடையாது. தி.மு.க.வும் தடை கேட்டு வழக்குப்போடவில்லை. வழக்குபோட்ட பா.ம.க. வக்கீல் பாலு, பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர் ஆகிய 2 பேரும் வழக்கினை வாபஸ் பெற்றனர். இதற்கு என்ன பதில்?

அதற்கு முன்பு நான்கூட நினைத்தேன். என்னவானாலும் பரவாயில்லை. தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது உடலை சுமந்து சென்று மெரினாவில் அடக்கம் செய்வோம். இதை தடுப்பவர்கள் யார் என்பதை பார்த்துவிடுவோம் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் அதற்குள் கோர்ட்டு உத்தரவு வந்துவிட்டது.

அப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருபவர்களுக்கு பாடம் கற்பிக்க கலைஞரின் நல்லாட்சி உருவாகிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களியுங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com