மசினகுடி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் கறவை மாடு கடன் வழங்குவதில் பாரபட்சம்

மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் கறவை மாடு கடன் வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Published on

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தின் பால் உற்பத்தியில் மசினகுடி பகுதி முக்கிய பங்கு வகித்து வருகிறது. மசினகுடி, மாயார், வாழைத்தோட்டம், மாவனல்லா, ஆனைக்கட்டி, சிறியூர், சொக்கநள்ளி, பொக்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் மாடுகள், எருமைகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வைத்து பராமரிக்கபட்டு வருகின்றன. இந்த கால்நடைகள் மூலம் கிடைக்கும் பால் மற்றும் சாணம் போன்றவற்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் இப்பகுதி மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியால் சுமார் 2 ஆயிரம் கால்நடைகள் உயிரிழந்தன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கால்நடையை வாழ்வாதாரமாக கொண்ட விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டுறவு சங்கத்தின் மூலம் அதற்கான கடன் வழங்கப்படுகிறது.

கறவை மாடு கடன் பெற மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்கம் பயனாளிகளை பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்கத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகள் பயனாளிகளை தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஏராளமான விவசாயிகள் கறவை மாடு வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், மசினகுடி பால் உற்பத்தியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கறவை மாடு கடன் வாங்க பரிந்துரை செய்துள்ளனர். மாயார், வாழைத்தோட்டம், மாவனல்லா, பொக்காபுரம் ஆகிய மற்ற கிராம மக்களுக்கு கறவை மாடு கடன் பெற பரிந்துரை செய்யாமல் உள்ளனர்.

மேலும் மசினகுடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பால் குளிரூட்டும் மையத்தில் சீரமைப்பு பணிகளுக்கு டெண்டர் விடாமல் முறைக்கேடு நடந்துவருவதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com