கொட்டாம்பட்டி,
மதுரைதிருச்சி நான்கு வழிச்சாலையில் உள்ளது, கொட்டாம்பட்டி. இந்த ஊரை சுற்றி குன்று, மலைகள் பல உள்ளன. இதில் குறிப்பாக கருங்காலக்குடியில் உள்ள பஞ்ச பாண்டவர் மலை, சமண தீர்த்தங்கரர் சிறபம் நிறைந்து உள்ளது. மேலும் அந்த மலையில் அரிய மூலிகை செடிகள், மரங்கள் ஏராளம் உள்ளன. இதுதவிர அருகில் கருங்குட்டு மலை, அரிட்டாப்பட்டி மலை உள்ளிட்டவை உள்ளன.
இந்தநிலையில் சமீப காலமாக கொட்டாம்பட்டியை சுற்றியுள்ள மலைகளில் அடுத்தடுத்து காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பஞ்ச பாண்டவர் மலையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல அறிந்த கிராம மக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரிய அளவிலான சேதம் ஏதும் ஏற்படவில்லை.
இதற்கிடையே கடந்த 2 தினங்களுக்கு முன்பு கச்சிராயன்பட்டியில் உள்ள பால்குடி அருவி மலையில் இரவில் காட்டுத்தீ பரவியது. இதனை அறிந்த வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் மரம், செடி, கொடிகள் எரிந்தன.
இந்தநிலையில் கொட்டாம்பட்டி அருகே தேனங்குடிபட்டியில் உள்ள கருங்குட்டு மலையில் நேற்று திடீரென்று காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் மலையில் சுமார் 20 ஏக்கர் பரப்பில் மரம், செடிகள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஏற்கனவே கடந்த 23ந்தேதி கருங்குட்டு மலையில் காட்டுத்தீ பரவியது. அப்போதும் சுமார் 10 ஏக்கர் பரப்பில் அரிய மூலிகை செடிகள் எரிந்தன.
எனவே அடுத்தடுத்து மலைகளில் காட்டுத்தீ ஏற்படுவதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.