பேரையூர்,
பேரையூர் தாலுகாவில் உள்ள சேடபட்டி, டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கரில் மானாவாரி பயிராக மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்து உள்ளனர். தற்போது செடிகள் நன்றாக முளைத்து கதிர் விட்ட நிலையில் உள்ளது. இந்த நிலையில் சந்தையூர், கீழப்பட்டி, தும்மநாயக்கன்பட்டி, பேரையூர், விஜய நாகையாபுரம், செம்பட்டி, பழையூர், சாப்டூர், வண்டாரி, வண்டபுலி உள்ளிட்ட மலையடிவாரங்களில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டு உள்ள மக்காச்சோள செடிகளை காட்டுப்பன்றிகள் கடித்து நாசப்படுத்தி சென்று விடுகிறது.
பெருங்காமல்லூர், காளப்பன்பட்டி, பூசலபுரம், பி.அம்மாபட்டி, குமராபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள புதர்களில் இருந்து காட்டுப்பன்றிகள் புறப்பட்டு விவசாய நிலங்களில் உள்ள மக்காசோள பயிரை சேதப்படுத்தி சென்று விடுகிறது.
ஒவ்வெரு காட்டிலும் தினசரி 2 சென்ட் முதல் 5 சென்ட் வரை உள்ள பரப்பளவில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனைஅடைந்து உள்ளனர்.
இது குறித்து பி.அம்மாபட்டியைச் சேர்ந்த விவசாயி கணேசன், பெருங்காமநல்லூர் விவசாயி காசிமாயன் ஆகியோர் கூறியதாவது:-
தற்போது மக்காச்சோள செடிகள் நன்றாக வளர்ந்து உள்ளது. ஆனால் காட்டுப்பன்றிகளால் செடிகள் நாசம் அடைந்து வருகிறது. படைப்புழு தாக்குதல் ஒருபக்கம் இருந்தாலும் தற்போது காட்டுப்பன்றிகளால் ஒரு பக்கம் பயிர்கள் சேதம் அடைவது மன வேதனையை தருகிறது.
கடந்த வருடம் பேரையூர் தாலுகா முழுவதும் பல ஏக்கரில் மக்காச்சோளம் பயிர்கள் காட்டுப்பன்றிகளால் சேதம் அடைந்தன. அதற்கு தற்போது வரை நிவாரண தொகை வந்து சேரவில்லை. எனவே காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தவும், சென்ற வருடம் காட்டுப்பன்றிகளால் சேதமான மக்காச்சோள பயிருக்கு நிவாரணம் வழங்கவும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கடந்த வருடம் காட்டுப்பன்றிகளால் சேதமான பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும்.
தற்போது காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம் அடைவது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.